

பெரம்பூர்,
சென்னை ஆா.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது தொகுதி மக்களுக்கு டி.டி.வி. தினகரன் சார்பில் டோக்கன் முறையில் 20 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து, ஓட்டுபோட்ட பின்னர் இந்த நோட்டையும், ஓட்டு போட்ட மை அடையாளத்தையும் காண்பித்தால் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்ற பிறகு கூறியதுபோல் மக்களுக்கு பணம் வந்துசேரவில்லை.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கவும், கோவில் விழாவில் கலந்துகொள்ளவும் நேற்று டி.டி.வி.தினகரன் வந்தார். இந்த தகவலை அறிந்த தொகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவில் முன்பு திரண்டு தினகரனை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தேர்தலின்போது கூறியதுபோல் 20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே? என்று 20 ரூபாய் நோட்டை காண்பித்து கோஷம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியினரை போலீசார் வேறு வழியில் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இதனால் அவர் அங்கு தண்ணீர் பந்தல் திறக்காமல் மற்றொரு தண்ணீர் பந்தலை திறக்க சென்றார்.
காசிமேடு பகுதியில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறும்போது, 20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மதுசூதனன் கையாள் ராஜேஷ் எற்பாடு செய்தவர்கள். அவர்களின் தோல்வியை மறைக்கவும், மக்களை கேவலப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். நாங்கள் பணம் தருவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை, 20 ரூபாய் நோட்டும் தரவில்லை. இதுகுறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும் என்றார்.
திவாகரன் அம்மா அணி என்ற புதிய அமைப்பு தொடங்கியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு தினகரன், திவாகரன் உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளார். யார் தூண்டுதலின் பேரில் அவர் புதிய அமைப்பு தொடங்கினார் என்பது விரைவில் தெரியவரும். திவாகரனை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் காண்பிக்க வேண்டும். எங்கள் கட்சி குடும்ப கட்சி இல்லை என்றார்.