

சென்னை,
சட்டமன்ற தேர்தல் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் ராகுல் காந்தியிடம் பேச மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று தகவல் வெளியானது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பு இருந்தே திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு, கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது.
தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது. பின்னர், தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்றுள்ளது. தவெக அரசில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்று முன் தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுக்க போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் செல்போன் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
சட்டமன்ற தேர்தல் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் ராகுல் காந்தியிடம் பேச மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “சுயசரிதை புத்தகம் வெளியிட்ட சோனியா காந்திக்கு வழ்த்து தெரிவித்து, கடிதம் எழுதினேன். அழைப்பிதழ் வரவில்லை. எனது உதவியாளர்களை அழைத்து கூறியதால் வாழ்த்து தெரிவித்தேன்” என கூறினார்.
மேலும் , அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ஏன் முதல்-அமைச்சர் அதை பற்றி பேசவில்லை என்ற கேள்விக்கு, “எந்த பிரச்சினையை பற்றி முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். முதல்-அமைச்சர் விஜய்க்கு காவிரி பிரச்சினை பற்றி தெரியாததால் அவர் பேசாமல் இருக்கிறார்.” என கூறினார்.