'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? நீதிபதி விளக்கம்

அந்த சார் யார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும்எதிரொலித்தது.
'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? நீதிபதி விளக்கம்
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்க கூடாது என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாட்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்தநிலையில், 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? என்பதற்கு விசாரணையின் போது போலீசார் அளித்த ஆதாரங்கள் மூலம் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

ஞானசேகரனிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கிய நேரத்தில், அவர் யாரோ ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு 'சார்' என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த சார் யார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.

ஞானசேகரன் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா? என்பது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில்,

'ஞானசேகரன், தன்னிடம் சிக்கிய மாணவியிடம் தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை திசைதிருப்பி மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது' எனக்கூறி உள்ளார். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், 'அண்ணா பல்கலைக்கழகம் நீண்ட நெடிய வரலாறை கெண்டது. இந்த வளாகத்தில் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிக்கு உலகளவில் நற்பெயர் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களில் 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.

பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவியை ஞானசேகரன் சீரழித்துள்ளார். இதன்மூலம் பல்கலைக்கழகம் மட்டுமல்ல ஓட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளார். இதுபோன்ற அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது. அனுமதிக்கவும் முடியாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com