

ஐபிஎல் போட்டியின்போது குழந்தைக்கு மாத்திரையை நொறுக்கி தண்ணீரில் கலந்து கொடுத்த காட்சியை, போதைப்பொருள் பயன்படுத்தியதாக தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக அரசில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக சரத்குமார் உள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்து வந்த நிலையில், அமைச்சர் சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
"போதைப்பொருள் எதிர்ப்பு நாளான இன்று காலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்தேன். அதன்பிறகுதான் இந்த வதந்தி பரவத் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மாத்திரையை விழுங்க மறுத்ததால், அதை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுத்தோம்.
அந்தக் காட்சியைத்தான் தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியது போல தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்.அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், அப்படிப்பட்ட செயலில் எப்படி ஈடுபட முடியும்? எனவே, இதுபோன்ற தவறான வீடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியும் விளக்கம் அளித்துள்ளார்.