கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததா? - வைரல் வீடியோவால் பரபரப்பு

மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவார்கள்.
கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததா? - வைரல் வீடியோவால் பரபரப்பு
Published on

கும்பகோணம்,

இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணம் மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவில் அருகே இந்த குளம் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள்.

இந்த நிலையில் மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடி யோவில் அரசலாற்றில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதை வழியாக கழிவுநீர் குளத்தில் நுரையுடன் கலப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ வேகமாக பரவியது தொடர்ந்து கும்பகோணத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆன்மிகவாதிகள், பக்தர்கள் மகாமகம் குளத்தை சூழ்ந்தனர். மேலும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மகாமகம் குளத்தில் கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்பழகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் காந்திராஜ், கோவில் செயல் அலுவ லர்கள் முருகன் (ஆதிகும்பேஸ்வரர் கோவில்), சுந்தரராஜன் (காசி விஸ் வநாதர் கோவில்) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனே குளத்துக்கு சென்று நீர் வழிப்பாதை வழியாக கழிவுநீர் கலக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் சிறிது நேரத்தில் நீர் வரும் பாதையில் இருந்து சரியான முறையில் தண்ணீர் வந்தது. அதனை அதிகாரிகள் நுகர்ந்து பார்த்தும் சோதனை செய்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உலகப்பிரசித்தி பெற்ற மகாமகம் குளத்திற்கு அரசலாற்றில் இருந்து போர்வெல் மூலம் வழக்கமாக தண்ணீர் கொண்டு வரப்படும். உபரி நீர் கிழக்கு கரையில் உள்ள வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படும்.

அதன்படி நீண்ட நாட்களுக்கு பிறகு போர்வெல் மூலம் அரசலாற்றில் இருந்து தண்ணீர் குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் வழிப்பாதையில் இருந்த முதல் பகுதி தண்ணீர் கலங்கலாகவும், நிறம் மாறியும் வந்ததால் அதுகழிவுநீர் போல் காணப்பட்டது. தகவல் அறிந்தவுடன் பணியாளர்கள் சென்று உடனடியாக அதனை சரி செய்துவிட்டனர். அதன்பின்னர் நல்ல முறையில் தண்ணீர் வந்தது. அந்த தண்ணீரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கழிவுநீர் கலப்பதாக தவறான செய்திகளை பரப்பவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com