ஜனநாயகன் படம் வெளியீட்டில் தேர்தல் ஆணையம் தலையீடா..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
ஜனநாயகன் படம் வெளியீட்டில் தேர்தல் ஆணையம் தலையீடா..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on

சென்னை,

தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி, இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு மட்டும் ரூ.92.02 கோடியாகும். ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களும் பிடிபட்டுள்ளன.

ஜனநாயகன் படம் வெளியீட்டில் தேர்தல் ஆணையத்தின் தலையீடு பற்றி இதுவரை எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள வாக்காளரின் புகைப்படம் முழுவதுமாக மாறுபட்டு இருந்தால் ஓட்டுப்போட அனுமதிக்க மாட்டார்கள். இப்போதுள்ள நிலைக்கும், புகைப்படத்துக்கும் லேசான மாற்றங்கள் இருந்தாலும் அது ஏற்கப்படும்.

வாக்காளர் தகவல் சீட்டை வைத்து ஓட்டுபோட எந்த வாக்காளரும் உரிமை கோர முடியாது. தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள ஆதார் உள்ளிட்ட 12 புகைப்பட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்துத்தான் வாக்குப்பதிவு செய்ய முடியும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்ப்பட்ட 23 லட்சம் வாக்காளர்களில் 13 லட்சம் பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு உள்ளது. தபால் மூலம் அடையாள அட்டை அனுப்பப்பட்டு வருகிறது. முகவரி சரியில்லை என்றால் எங்களுக்கே திரும்பி வந்துவிடும்.

கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதி அளிக்கும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக ஏப்ரல் 1-ந் தேதியை தகுதி அளிக்கும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க முடியும். இப்படி 3 மாதங்கள் இடைவெளியில் ஆண்டுக்கு 4 முறை வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

அரசியல் கட்சிகள் சார்பில் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார தேதி குறித்த பட்டியல் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தல் புகார் தொடர்பாக இதுவரை 932 மனுக்கள் வந்துள்ளன. இதில் 20 மட்டும் நிலுவையில் உள்ளன. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எதுவும் வரவில்லை.

அரசியல் கட்சிகள் சார்பில் ஒருவர் மீது ஒருவர் புகார்கள் கூறுகின்றனர். தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com