உங்கள் புகழ் துதி பாட பள்ளிச் சிறார்கள்தான் கிடைத்தனரா? - முதல்-அமைச்சருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

பள்ளி என்பது எந்தக் கட்சியின் புகழ் பாடும் மேடையோ, ரீல்ஸ் எடுக்கும் படப்பிடிப்பு தளமோ அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழாவில், தவெகவினர் பள்ளிச் சிறார்களை வைத்து வாழ்த்து பாடல் பாடச் செய்து ரீல்ஸ் எடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது. பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம். அது எந்தக் கட்சியின் புகழ் பாடும் மேடையோ, ரீல்ஸ் எடுக்கும் படப்பிடிப்பு தளமோ அல்ல.

தவெக அரசு பதவியேற்ற நாள் முதல் மக்கள் பணியில் காட்ட வேண்டிய அக்கறையை, ரீல்ஸ் அரசியலில் காட்டி வருவது ஜனநாயகத்தின் வெட்கக்கேடு. முதல்-அமைச்சர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதற்காக, அந்த சினிமா கலாசாரத்தை பள்ளி மாணவர்களிடம் திணிப்பது ஏற்க முடியாத செயல்.

இது போன்ற செய்கைகளை தவெக அமைச்சர்கள் ஊடக பேட்டிகளில் “முறையற்ற செயல்” என்று கூறுவது மட்டும் போதாது. மாணவர்களின் கல்வி சூழலை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாகவே தமிழக நலன்மேல், மாணவர்கள் மேல் அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும் இதுபோன்ற செய்கைகளை ஊக்கப்படுத்தாது. எனவே பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், புகழ் பாடல்கள், ரீல்ஸ் படப்பிடிப்புகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com