தளி அருகேவீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலி

தளி அருகேவீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலி
Published on

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலியானது.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்த பசவனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 3 வயதில் ரக்சித் என்ற ஆண் குழந்தை இருந்தான்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சுரேசின் பழமையான ஓட்டு வீட்டின் சுவர்கள் நனைந்து போயிருந்தன. இதற்கிடையே நேற்று மாலை ரக்சித் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென வீட்டின் முன்பகுதியில் இருந்த சுவர் இடிந்து குழந்தை ரக்சித் மீது விழுந்தது.

சோகம்

இதில் அவன் பலத்த காயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாத்தா ருத்ரப்பா மற்றும் பெற்றோர் குழந்தையை மீட்டு தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுவர் இடிந்து குழந்த இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com