எடப்பாடியுடன் கருத்து வேறுபாடு?.. 5-ந் தேதி மனம் திறக்கிறேன் - செங்கோட்டையன் தகவல்

செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வந்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடியுடன் கருத்து வேறுபாடு?.. 5-ந் தேதி மனம் திறக்கிறேன் - செங்கோட்டையன் தகவல்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது.

இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். அதைத்தொடர்ந்து பா.ஜனதாவுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் தெரிவித்து வந்தார்.

இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறித்து பேசினார். குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்கள் முதல் தற்போது வரை தெரிவித்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் கூட்டணி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார். அதன்பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம், 5-ந் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து இன்றும் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், 5-ம் தேதி அன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேச போகிறேன். அப்போது என்ன கருத்துகளை சொல்லப்போகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஆகவே அதுவரை நீங்கள் பொறுத்திருந்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன என்று கூறினார்.

மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா? என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com