திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:ஓட்டல் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி

திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் ஓட்டல் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகள்:ஓட்டல் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் ஓட்டல் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

விபத்தில் 2 பேர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுஜித் (வயது 20). இவருடைய நண்பர் பிரபு(26). இருவரும் கோவையில் தனியார் ஓட்டலில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவைக்கு செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டனர்.

திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மாட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்துக்குள்ளான லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.கண்ணாபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் முருகேசன்(34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மதுரையில் தனியார் கொரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பேரையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் அருகே பாய்ஸ் டவுன் பகுதியில் வந்த போது எதிரே வந்த வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

பஸ்-இருசக்கர வாகனம் மோதல்

திருமங்கலம் அருகே பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் குணசேகரன்(23). இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். குணசேகரன், தனது நண்பர் முத்தையாவுடன்(20) திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த முத்தையா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com