சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடை

ஐபிஎஸ் அதிகாரி வருண் தொடர்ந்த வழக்கு விசரணைக்கு தடை கேட்டு சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மதுரை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து யூடியூப்பில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி போலீசார் தங்களது எல்லையை மீறி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக ஒரு பேட்டியின்போது, அதிகாரத்தில் இருப்பவர்களின் சட்டவிரோத நடவடிக்கை என கூறியிருந்தேன். எனது இந்த கருத்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி, அப்போதைய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.யாக உள்ளார்) வருண்குமார், திருச்சி கோர்ட்டில் என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.என் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும். முதல்கட்டமாக அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராமமூர்த்தி, சங்கர் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிட்ட யாரையும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பேட்டி அளிக்கவில்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதாடினர். விசாரணை முடிவில், மனுதாரருக்கு எதிராக திருச்சி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்டு 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.






