அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Published on

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி பெருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து மறுநாள் மயானக் கொள்ளை திருவிழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

தீ மிதித்தனர்

பிற்பகல் 2.30 மணிக்கு பூசாரிகள் உற்சவ அம்மனை கோவிலில் இருந்து பல்லக்கில் அக்னி குளத்திற்கு தூக்கிச்சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பிறகு அங்கிருந்து பம்பை, மேள, தாளம் முழங்க புறப்பட்ட அம்மன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார்.அதைத்தொடர்ந்து திரளானபக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடன் தீமிதித்தனர்.

மேலும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனாக முதுகில் இரும்பாலான கொக்கியை குத்தி லாரியை இழுத்தவாறும், அதன் மீது தொங்கியவாறும் வந்தனர். இது தவிர தீக்குண்டத்திற்கு முன்பாக செடல் குத்திக் கொண்டு பறக்கும் காவடி எடுத்து அம்மனுக்கு மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

பாதுகாப்பு

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com