

சென்னை,
'தினத்தந்தி'யை தோற்றுவித்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வகுத் துக் கொடுத்த பாதையில்தான், இன்றளவும் 'தினத்தந்தி' வீறுநடைபோட்டு வருகிறது.
84 ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர் காட்டிய வழியைவிட்டு இம்மியளவும் பிசகவில்லை. முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் ஆகட்டும், அண்ணா ஆகட்டும், கருணாநிதி ஆகட்டும். அவர்கள் பெயர்தான் 'பிராண்ட்' அதாவது முத்திரை என்று கற்றுக்கொடுத்து இருக்கிறார். இதனால்தான் அவர் அன்றைய கால கட்டங்களில் முதல்-மந்திரி காமராஜர் என்றும் தலைப்பிட்டு இருக்கிறார். முதல்-மந்திரி என்று இல்லாமல் வெறுமனே காமராஜர் என்றும் தலைப்பிட்டு இருக்கிறார். இதுபோல முதல்-அமைச்சர் அண்ணாதுரை என்றும், முதல்-அமைச்சர் என்று குறிப்பிடாமல் வெறுமனே அண்ணாதுரை என்றும் தலைப்பிட்டு இருக்கிறார். அவர் காட்டிய பாதையில் அவர் இருக்கும்போதும் சரி, மறைந்த பிறகும் சரி முதல்-அமைச்சர் கருணாநிதி என்றும் தலைப்பு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல வெறுமனே கருணாநிதி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் காலத்துக்குப்பிறகு எம்.ஜி.ஆருக்கும். முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் என்றும், முதல்-அமைச்சர் என்று குறிப்பிடா மல் வெறுமனே எம்.ஜி.ஆர். என்றும் தலைப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழியை பின்பற்றித்தான் பிற்காலங்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனி சாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் என்று போட்டும் அவர்கள் பெயர் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் என்று குறிப்பிடாமலும் அவர்கள் பெயர்கள் மட்டும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இது தலைப்புக்கேற்ற வகையிலும், இடத்துக்கு ஏற்ற வகையிலும்தான் முடிவு செய்யப்படுகிறது.
ஆக, முதல்-அமைச்சர் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயரை போட்டாலும் சரி, முதல்-அமைச்சர் என்று போடாமல் அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டாலும் சரி அவர்கள் பெருமைக்கும், புகழுக்கும் எந்த பங்கமும், பாதிப்பும் வராது. அவர்கள் பெயரே அவர்களின் அடையாளம்தானே. அவர்களின் பெருமைதானே. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் வழி காட்டுதல்படிதான் 'தினத்தந்தி' இன்றளவும் செயல்பட்டு வருகிறது.