

உடைந்த சுவர்
கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனையின் பின்புற சுவர் உடைந்து காணப்படுகிறது. அந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நஜீமா, ஈரோடு.
சாக்கடை தூர்வாரப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சாலையோரம் சாக்கடை வடிகால் செல்கிறது. அங்கு அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. மழை பெய்யும்போது மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். எனவே சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருங்கல்பாளையம்.
அடிப்படை வசதி தேவை
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 6-வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொட்டிபாளையம்.
குண்டும், குழியுமான சாலை
ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் வழியாக முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் குழிகளில் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகிறார்கள். எனவே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
பாதாள சாக்கடை அமைக்கப்படுமா?
ஈரோடு மாணிக்கம்பாளையம் நேதாஜி நகர் பகுதியில் பலமுறை ரோடுகள் போட்டதால் ரோடு பகுதி உயர்ந்தும், வீடுகள் பள்ளத்திலும் உள்ளன. இந்த பகுதியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. எனவே இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
மின்கம்பத்தில் செடி, கொடிகள்
அந்தியூர் சிவசக்தி நகரில் செல்லீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின் கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால், மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கின் வெளிச்சம் வீதியில் விழுவதில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் அச்சத்தில் நடமாடுகிறார்கள். மேலும் மழைக்காலம் என்பதால் மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை யாராவது தொட்டால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், அந்தியூர்.