தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்.. இந்து முன்னணியினர் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்.. இந்து முன்னணியினர் கைது
Published on

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து அமைப்புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

இதை ஏற்காத இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து நகர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் இன்று குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் விநாயகர் சிலையை ஒரு வேனில் ஏற்றினர்.

பின்னர் மேளதாளம் முழங்க அந்த சிலையை குடைப்பாறைப்பட்டிக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்குள்ள விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் சிலையை வைத்தனர். இதையடுத்து விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதோடு சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், பழங்கள் உள்ளிட்டவற்றை விநாயகருக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர். அதன் பின்னர் விநாயகர் சிலையை கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதையடுத்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.

இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 24 பெண்கள் உள்பட இந்து முன்னணியினர் 36 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

அதேநேரம் இந்து முன்னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ் முன்னிலையில் கோட்டைக்குளத்தில் கரைத்தனர். இந்த சம்பவத்தால் குடைப்பாறைப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com