தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் திக்குமுக்காடிய திண்டுக்கல்

தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் திண்டுக்கல் நகரம் திக்குமுக்காடியது. 3 இடங்களில் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் திக்குமுக்காடிய திண்டுக்கல்
Published on

தீபாவளி பொருட்கள் விற்பனை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆடை, பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதையொட்டி திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல்லில் குவிந்தபடி உள்ளனர்.

அதன்படி நேற்று நகரில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மாநகராட்சி அலுவலக சாலை, கிழக்கு ரதவீதி, கமலாநேரு மருத்துவமனை சாலை ஆகியவற்றில் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

திக்குமுக்காடிய திண்டுக்கல்

இந்த சாலையோர கடைகளில் ரெடிமேட் ஆடைகள், குடை மற்றும் பை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். இதுதவிர ரதவீதிகள், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளும் உள்ளன. அந்த கடைகளிலும் பட்டாசு விற்பனை தீவிரமாக நடக்கிறது.

திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் திண்டுக்கல்லுக்கு படையெடுத்து வந்ததால், நகர் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. அதிலும் மாநகராட்சி அலுவலக சாலை, மெயின்ரோடு, கிழக்கு ரதவீதிகளில் திரண்ட மக்களால் நெரிசல் ஏற்பட்டு திண்டுக்கல் திக்குமுக்காடியது.

வாகன போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே உள்ளதால் நேற்றைய தினம் கூட்டம் அதிகஅளவில் காணப்பட்டது. இதையடுத்து பெரியார் சிலை முதல் வெள்ளைவிநாயகர் கோவில் வரையுள்ள மாநகராட்சி அலுவலக சாலை, கமலாநேரு மருத்துவமனை சாலை, கிழக்கு ரதவீதி ஆகியவற்றின் நேற்று மாலை வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

இதனால் தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த டட்லி பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் கடைவீதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சத்திரம் சாலை, தெற்கு ரதவீதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக நகரில் பல சாலைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எனவே நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிக அளவில் மக்கள் பொருட்கள் வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் நகர துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 3 கண்காணிப்பு கோபுரங்கள்

தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்களிடம், திருடர்கள் கைவரிசை காட்டிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே திருடர்களை கண்டறிந்து பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதில் நின்றபடி போலீசார் தெலைநோக்கி மூலம் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com