

புதுடெல்லி,
முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக நேபாளப் பிரதமர் பாலன் ஷா இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது எரிசக்தி, பெட்ரோலியக் குழாய் இணைப்பு, விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முக்கியமாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கும் நேபாளத்தின் ஜனக்பூர் தாமிற்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணிகள் ரெயில் சேவையை இரு தலைவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அயோத்தி கண்டோன்மென்ட் மற்றும் ஜனக்பூர் தாம் இடையிலான சுமார் 604 கி.மீ தூரத்தை இந்த ரெயில் ஏறக்குறைய 19 மணி நேரத்தில் கடக்கும். பயணிகள் வழியில் ரெயில் மாற வேண்டிய அவசியம் இருக்காது. அயோத்தியிலிருந்து திங்கட்கிழமைதோறும் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 மணிக்கு (நேபாள நேரப்படி) ஜனக்பூரைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக, ஜனக்பூரிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமையும் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு அயோத்தியை வந்தடையும். ஸ்ரீராமரின் பிறப்பிடமான அயோத்தியையும், சீதா தேவியின் பிறப்பிடமாக நம்பப்படும் ஜனக்பூரையும் இந்த நேரடி ரெயில் இணைக்கிறது. இது ராமாயண சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு, ஆன்மீகப் பயணங்களை ஊக்குவிக்கும். மேலும், எல்லைப் பகுதிகளில் வர்த்தகம், உள்ளூர் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.