இயக்குநர் பாக்யராஜ் மறைவு: பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி இரங்கல்

சிறிய வயதில் அவரின் 'பாக்யா' வார இதழை அவரின் கேள்வி - பதில்களுக்காக காத்திருந்து வாங்கி படித்த அனுபவம் உண்டு என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி,பாக்யராஜ்
Published on

சென்னை,

பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

படங்களை ரசித்து பார்ப்பேன்

என் இளம் வயதில் பாக்யராஜ் படங்களை விரும்பி ரசித்து பார்ப்பேன். மிகச் சிறந்த கலைஞராகிய அவரின் மிகப்பெரிய விசிறி நான். அவரின் எந்த படத்தையும் நான் பார்க்க தவறியதில்லை. "முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு, எங்க சின்ன ராசா, சின்ன வீடு, சுவர் இல்லாத சித்திரங்கள் என பல்வேறு படங்கள்.

வெற்றி படம்

முந்தானை முடிச்சு' ஊர்வசி என்ற சிறிய பெண்ணோடு நடித்த அவரின் முதிர்ச்சி. ஒரு மிக பெரிய வெற்றி படம். 'சின்ன வீடு' படத்தில் அவரின் நடிப்பு சிறப்பு. குறிப்பாக சின்ன வீட்டுக்கு சென்று மாட்டிக்கொண்ட பின் அவரின் திரு திரு 'முழி'. 'டார்லிங், டார்லிங், டார்லிங்'ல் பூர்ணிமா ஜெயராமோடு களை கட்டினார். பிரமாதமான படம். 'தூறல் நின்னு போச்சு' படத்தில் நம்பியாரோடு அவரின் நடிப்பு தூள்.

ரசித்த படம்

நான் சிகப்பு மனிதன் படத்தில் இயல்பான மனிதனாக ஒரு காவல்துறை அதிகாரி வேடம். 'புதிய வார்ப்புகள்', 'விடியும் வரை காத்திரு' , 'வீட்ல விசேஷங்க','ராசுக்குட்டி' என பல்வேறு படங்கள் அவரின் நடிப்பில். உத்தம புத்திரனில் தனுஷின் தந்தையாக அசத்தியிருப்பார்.அவரின் மிகப் பெரிய சொத்தே காமெடி கலந்த ஹீரோயிசம், அவரின் கண்ணாடி, குரல். அவர் நடிப்பில் ஒரு எதார்த்தம் கலந்திருக்கும். 'தாவணிக் கனவுகள்' நான் மிகவும் ரசித்து பார்த்த படம்.

'பாக்யா' வார இதழ்

சிறிய வயதில் அவரின் 'பாக்யா' வார இதழை அவரின் கேள்வி - பதில்களுக்காக காத்திருந்து வாங்கி படித்த அனுபவம் உண்டு. அரசியலில் ஆர்வம் இருந்தாலும் அவரால் சோபிக்க முடியவில்லை. ஒரு நல்ல கலைஞரை நாம் இழந்து விட்டோம். சமீப காலங்களில் அவரை ஒன்றிரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.

அவரின் மறைவு சோகம். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com