

சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர், திரைத்துறையை மண் வாசனையால் நிரப்பியவர், தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா. அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த பாரதிராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.