தமிழ்நாட்டில் தொடரும் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி

போதைப்பொருள் விற்பனை மாணவர்கள்- இளைஞர்களை குறிவைத்து ரகசியமாக நடக்கிறது.
தமிழ்நாட்டில் தொடரும் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி
Published on: 

சென்னை,

நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்கள் போதைப்பொருள் என்ற அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். போதைப்பொருள் ஒழிப்புக்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் போதைப்பொருள் விற்பனை மாணவர்கள்- இளைஞர்களை குறிவைத்து ரகசியமாக நடக்கிறது.

இதனால் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

கடந்த 19-ம் தேதி மத்திய அரசின் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை மாதவரத்தில் நடத்திய சோதனையில் ரூ.700 கோடி 'ஹெராயின்' போதைப் பொருள் சிக்கியது. ஐஸ்வண்டி மூலம் இந்த போதைப்பொருளை கடத்திய 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட ஹெராயினை இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய முழு விவரமும் கிடைத்த பிறகு அறிக்கையாக வெளியிடப்படும் என்று வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் தொண்டியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்தனர். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த ஒரு காரை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அந்த வண்டியில் 1.75 கிலோ தங்கத்தை கட்டிகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த சையது நபி கானை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் தொண்டியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட 5-வது முக்கிய சோதனை இதுவாகும்; இதற்கு முன்பு மெத்தம்பெட்டமைன், ஹெராயின் மற்றும் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடத்தல் தொடர்புடைய ரூ. 258 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளை மத்திய வருவாய் புலனாய்வு தீவிரப்படுத்தியுள்ளது.

X