

கோவை,
கோவையை அடுத்த வடவள்ளி பொம்மனாம்பாளையம் பகுதியில் தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை உக்கடத்தை சேர்ந்த ரஷீத், ஷேக் ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அங்கு பெரோஸ் என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த பங்களாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாகவும் அறிவித்ததால் ஏராளமானோர் அங்கு சென்றனர்.
இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக செல்லாத நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூபாய் நோட்டுக்கட்டில் மேல் பகுதியில் மட்டும் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. உள்பகுதியில் அந்த ரூபாய் நோட்டு அளவுக்கு வெட்டப்பட்ட காகிதங்கள் இருந்தன. அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
பங்களாவின் உரிமையாளர் ஆனந்தன் உள்பட 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். விசாரணையில், இவர்கள் 50 ஆயிரம் ரூபாய் வாங்கினால் அதற்கு ரூ.1 லட்சத்துக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்தது தெரியவந்தது. 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.