தி.மு.கவுக்கும் தி.மலை மக்களுக்கும் பேரிழப்பு - முன்னாள் எம்.பி. வேணுகோபால் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்

முன்னாள் எம்.பி. வேணுகோபால் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி வேணுகோபால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

இன - மான மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.

வேணுகோபால் 40 ஆண்டுகள் மாவட்ட அவைத்தலைவராக இருந்தவர். 2019-ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தைத் தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன்.

அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான. அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான வேணுகோபாலின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com