

சென்னை,
ரெயில்வேயில் முன்பு தனித்தனியாகச் செயல்பட்டு வந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த ஒரே செயலியின் மூலம் பயணிகள் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட், நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் பெற முடியும்.
மேலும், ரெயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். ரெயில் பெட்டி மற்றும் நிலையங்களில் உள்ள குறைகள் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம். இந்தநிலையில் பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் 'ரெயில் ஒன்' செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்போருக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டண சலுகையை அடுத்த ஆண்டு (2027) மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
யு.பி.ஐ. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தி இந்த சலுகையை பெறலாம். இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கான 3 சதவீத கேஷ்பேக் சலுகை 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.