

அண்ணாமலை நகர்,
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்,தைவான் தேசிய சுங்சிங் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் மாண்டிப்பில்லா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வின் தொடர்ச்சியாக அண்மையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து இரு புதிய நண்டு வகைகளை உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்து புதிய பெயர்களையும் சூட்டின.
தற்போது இவர்களின் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயராய்வு மையத்தின் எதிரே அமைந்துள்ள சதுப்பு வனத்திலிருந்து புதிய வகையான நண்டினை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த புதிய வகை நண்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டிற்கு மேலான கல்வி மற்றும் ஆய்வு சேவையை நினைவூட்டும் வகையில் சூடோஹெலிஸ் அண்ணாமலை என்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வினை அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ்வு உயராய்வு மைய மாணவி பிரேமா மற்றும் இம் மையத்தின் இணைப்பேராசிரியர் ரவிச்சந்திரன், தற்போது மிகைப் பேராசிரியராக அரசு திருமகள், ஆலை கல்லூரி குடியாத்தத்தில் பணிபுரிகிறார். மேலும் தைவான் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹெசிசின் ஆகியோரின் கூட்டு முயற்சியாக உலக விலங்கின எண்ணிக்கையில் மற்றொரு இனமாக உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த ஆய்வின் கட்டுரையை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டு பிற இன நண்டுகளிலிருந்து மூலக்கூறு ஆய்விலும் உருவவியல் ஆய்விலும் வேறுபட்டுள்ளது என ஒப்புக்கொண்டு இதன் ஆய்வுக்கட்டுரையை விலங்கியல் படிப்பு என்ற உலக பிரசித்தி பெற்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்ள உறுதுணையளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் கே. சீத்தாராமன், கடல் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குனர் எம்.கலைச்செல்வன் ஆகியோருக்கு நன்றி தெரவித்தனர்.