ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான சதிக்கல் சிலை கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான சதிக்கல் கண்டடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான சதிக்கல் சிலை கண்டெடுப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்களாகம் அம்மச்சியார் அம்மன் கோவில் இடதுபுற மதில் சுவரின் ஓரமாக 550 ஆண்டுகள் பழமையான ஒரு சதிக்கல் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் ராஜபாண்டி, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

போர் மற்றும் பிற காரணங்களுக்காக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் பழக்கம் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு சதிக்கல் எடுத்து மக்கள் வணங்கி இருக்கிறார்கள். கணவன், மனைவி இருப்பது போன்றோ தனியாக பெண் மட்டும் இருப்பது போன்றோ சிற்பம் அமைப்பர். பெண் கையை உயர்த்தியவாறு வளையல் உள்ளிட்ட அணிகலன்களை அணிந்தவளாக காட்டப்பட்டுள்ளார். இவற்றை தீபாஞ்சம்மன் மாலையிடு, மாலையடி எனவும் அழைப்பர்.

இங்கு கண்டறியப்பட்டுள்ள சதிக்கல் 2 அடி உயரம், 3 அடி அகலத்துடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் உள்ள ஆணும், பெண்ணும் பாணர்பாடினி போல் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கோவிலில் இசைமீட்டி பாடல் பாடி நடனமாடும் இசை கலைஞர்களாக இருக்கலாம். ஆண்டாள் கோவில் திருவிழாக்களுக்காக 45 மேளக்காரர்கள் 50 ஆக உயர்த்தி ஆணையிட்டதையும் பாணர்களுக்கு பாணாங்குளம் என்ற ஊரில் நில தானம் வழங்கியதாகவும் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

சிற்பத்தில் உள்ள இசைக்கருவிகளை கொண்டு இது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் இசைப்பணி செய்த பாணவர்களின் சதிக்கல் என்பதை அறிய முடிகிறது. இது ஒரு அரியவகை பாணர்பாடினி சதிக்கல் ஆகும்.

சிற்பத்தில் உள்ள இருவரும் இசை வல்லுனர்களாகவும், கோவில் இசை கலைஞர்களாகவும் இருக்கலாம். இதன் அமைப்பைக் கொண்டு இது கி.பி. 15-ம் நூற்றாண்டு வாணாதிராயர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். அரியவகை சதிக்கல்லான இதை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com