சிதைந்த நிலையில் பழமையான சிற்பம் கண்டெடுப்பு

ராஜபாளையம் அருகே சிதைந்த நிலையில் பழமையான சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
சிதைந்த நிலையில் பழமையான சிற்பம் கண்டெடுப்பு
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே சிதைந்த நிலையில் பழமையான சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

10-ம் நூற்றாண்டு

ராஜபாளையம் அருகே சேத்தூர் சேவுகப்பாண்டியன் மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவற்றில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் சிற்பம் சிதைந்த நிலையில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் உதயகுமார், தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஹரி பிரசாத் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள உடைந்த சமணர் சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

சமணர் வாழ்ந்த குகை

இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:- தமிழகத்தில் பல இடங்களில் ஏராளமான சமண சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் சேத்தூர், புத்தூர், மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் சமணர் வாழ்ந்த குகைத்தளங்களும், கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

அந்த வகையில் இங்கு காணப்படும் சமணர் சிற்பமானது கழுத்துப்பகுதி வரை உடைப்பட்டு தனித்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் தரைத்தளம் அமைக்கும் பொழுது மார்பு மற்றும் இடுப்பு பகுதி அமைந்த கற்துண்டு சிற்பம் கிடைத்துள்ளது. அதேசமயம் 3-வது பாகமாக தீர்த்தங்கரர் அமர்ந்துள்ள கற்துண்டு கிடைக்கப்பெறவில்லை.

உடைந்த முக்குடைநாதர் தீர்த்தங்கரர் சிற்பத்தில், தலைக்கு மேலே முக்குடை அமைத்து நிழல் தருவது போன்றும், தலைப்பகுதியை சுற்றி கவாலையுடன் கூடிய ஒளிவட்டம் திகழ்கிறது. தலைக்கு மேலே மணிமலர்கள் கொண்ட அசோக மரத்தின் கிளைகள் சுருள் சுருளாக விரிந்துள்ளது.

மாணவர்களுக்கு களப்பயிற்சி

நீள செவியுடைய உடல் அமைப்புடன் விளங்கும் தீர்த்தங்கரரின் இரு புறமிருந்து பக்கத்திற்கு ஒருவராக இரு இயக்கர்கள் கவரி வீசுவது போன்றுள்ளது. முழு உருவம் இல்லாமல் உள்ளது. கீழே அமர்ந்துள்ள துண்டு சிற்பம் கிடைக்கப்பெற்றால் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்துள்ள நிலையில் தீர்த்தங்கரர் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த தீர்த்தங்கரர் சிற்பத்தின் 2 துண்டுகளையும் ஒன்று சேர்த்து பள்ளியின் வளாகத்தில் வைத்து, பாதுகாத்து மாணவர்களுக்கு சமண சிற்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலமாக மாணவர்களுக்கு களப்பயிற்சி அளித்து கிராமப்புறங்களில் உள்ள வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கண்டறிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com