

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இது தமிழர்களின் பாரம்பரியத்தையும், பழங்கால நாகரிகத்தையும், தமிழரின் வீரத்தையும் பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
குறிப்பாக, 2014-15- ஆம் ஆண்டுகளில்( 'Archaeological Survey of India') ஆர்க்கிலாஜிக்கள் சர்வே ஆப் இந்தியா வைகை நதிக்கரை நாகரிகத்தை ஆய்வு செய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 2015-16- ஆம் ஆண்டில் மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு 'Indus Valley Civilization'-ஐ ஒத்த கட்டுமானமாக இருப்பதால், தமிழகத்தின் தொன்மை வரலாற்றிற்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது.
பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, அகரம், கொந்தகை பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு பல்வேறு பழமையான பொருட்களை கண்டறிந்தது. இருப்பினும், இரண்டாம் கட்டத்தில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் முழு தொடர்ச்சியை உறுதிப்படுத்த பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கஜேந்திரன் என்பவரின் நிலம் நீண்ட கால முயற்சிக்குப் பின் அரசால் பெற்றுக் கொள்ளப்பட்டு, கடந்த மார்ச் 18- ஆம் தேதி 11- ஆம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தோண்டப்பட்ட குழிகளில் செங்கல் கட்டுமானம், சாயக் கிண்ணம், சரிந்த கூரை ஓடுகள் போன்றவை கண்டறியப்பட்டன.
கீழடியில் நடந்து வரும் 11ம் கட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மீட்டர் ஆழத்தில், எட்டு அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி கண்டறியப்பட்டதால் தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது கண்டறியப்பட்ட கட்டுமானம் தெற்கு திசையில் தொடர்வதாக இருப்பதால், அந்தப் பகுதியிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அதிகளவில் செங்கல் கட்டுமானங்கள் வெளிப்படுவதால், கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. இதனால் அகழாய்வு பணிகளில் தொல்லியல் துறை மாணவர்களும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பண்டைய காலத்தில் சாயத் தொழிற்சாலை செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.