

சென்னை,
தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தங்களது திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாக கூறி ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரிவிலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், அந்த நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரிவிலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறினார்.
இதையடுத்து வணிகவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குழுவில் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இது போன்ற குழுக்களை அமைக்கும் போது அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறைகள் இருந்தால், அதனை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது போன்ற நிபுணர் குழுக்களை அமைக்கும் போது நேர்மையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு, பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதை உறுதி செய்ய, குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்களையும் மாற்றியமைக்கும் வகையில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.