

சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, கொரோனா பரவல் காரணமாக, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணவர் அரங்கில் நடைபெறுகிறது. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளை காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.
தற்போதைய கொரோனா சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்கள், செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலைவாணர் அரங்கின் 3-வது தளம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்றது. கூட்டத்தொடர் நடைபெறும் தளத்தில் உள்ள படிக்கட்டுகள், பக்கவாட்டுச் சுவர்கள், கதவுகள், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடித்து சுத்தம் செய்யப்பட்டது.
மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர். மேலும் முதல் தளத்தில் உள்ள சபாநாயகர் அறை, கொறடா அறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் அறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதே போன்று சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.