அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கபட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது. எனவே கே.சி .பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது, கே.சி. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து, தனக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த நீக்கம் செல்லாது" என வாதிட்டார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, "உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம்" என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com