ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
Published on

விளம்பரங்களில் பிரபலங்கள்

ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் வாலிபர்கள், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பதால் அந்த விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்றும், இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில் ஈடுபடும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி கிரிக்கெட், சினிமா பிரபலங்களுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதே நேரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

புதிய சட்டம்

அதை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, போதுமான காரணங்களுடன் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம். முறையாக புதிய சட்டம் அமல்படுத்த எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டது.அதே நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், அது சம்பந்தமான வழக்கு விசாரணை தொடர வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு இருந்தது.

மனு தள்ளுபடி

இந்த நிலையில் அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சமீபத்தில் கூட ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் மதுரையில் பலியாகி உள்ளார். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் உயிர்பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே இந்தவிளையாட்டு விளம்பரங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், ஆன்லைன் விளையாட்டு தடைச்சட்டம் புதிதாக பிறப்பிக்கலாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதாக அமையும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com