நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி

நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி
Published on

நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்களது நிறுவனத்துக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதற்கிடையே, வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் எங்கள் மீதும், நிறுவனத்தின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினையை சரி செய்ய விரும்புவதால், இதற்கு தீர்வு காண ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த 11-ந் தேதி நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நியோமேக்ஸ் நிறுவனத்தில் 32,048 பேர் முதலீடு செய்துள்ளனர் என உத்தேசமாகத்தான் நிறுவனம் குறிப்பிடுகிறது. எவ்வளவு முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி தலைமையிலான குழு அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையை பாதிக்கும். நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள முதலீட்டாளர்களை கணக்கிட்டால் பிரித்து வழங்க 49 கோடியே 72 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. ஆனால், டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனை 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டும் உள்ளது. சராசரியாக பிரித்து கொடுக்க வேண்டும் எனில் ஒரு முதலீட்டாளருக்கு 697 சதுர அடி மட்டுமே கொடுக்க முடியும். இது சாத்தியமில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில், இந்த மனுவை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை நேற்று ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com