

சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில நேரங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று காலை 6 மணிக்கு மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதுவரை மெட்ரோ ரெயில் நிலையங்களில் காகித முறையில் டிக்கெட் வழங்கப்பட்டது. பின்னர், அதுவும் சரியாக பயணிகளுக்கு வழங்க முடியவில்லை. அலுவலகத்துக்கு செல்லக்கூடிய நேரமான காலை 8 மணியளவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால் காலை 8 மணியில் இருந்து 10.30 மணி வரை பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் மெட்ரோ ரெயிலில் ஏறி இலவசமாக பயணம் செய்தனர்.
காலை 10.30 மணிக்கு மேல் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் முறையாக டிக்கெட் வழங்கி, பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண சேவையில் நேற்றுமுன்தினம் பிரச்சினை இருந்து இருக்கிறது. அதையும் அதிகாரிகள் சரிசெய்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டலுக்கு மாற்று காகித பயன்பாடு தான்
மெட்ரோ ரெயில் சேவை நடைமுறைக்கு வந்தபோது அதிநவீன தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடிப்படையில் டிக்கெட் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. இதை பலரும் வரவேற்றனர். என்ன தான் டிஜிட்டல் முறை கொண்டு வரப்பட்டாலும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பிறகு பழைய முறையான காகித பயன்பாடு தான் கை கொடுத்து உதவி இருக்கிறது.
மெட்ரோ ரெயில் டிக்கெட் எந்திர கோளாறு ஏற்பட்ட சமயத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு காகிதம் மூலமே பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்போது, மாற்று ஏற்பாடு ஏதாவது செய்யப்பட்டு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. ரெயில் நிலையங்களில் காகிதமும் தீர்ந்துபோனதால், இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து தற்போது மாற்று ஏற்பாட்டுக்கான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் யோசித்து வருகிறது.