1,326 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

தேனிக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட 1,326 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
1,326 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு
Published on

முதல் சரக்கு ரெயில்

போடி-மதுரை இடையே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்த இந்த சேவையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிட்ட கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் மதுரை-தேனி இடையே ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போடிக்கும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

1,326 டன் அரிசி

மேலும், சரக்கு போக்குவரத்து சேவைக்காக மதுரை கோட்டத்தின் 19-வது சரக்கு முனையாக தேனி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டது. இங்கு சரக்கு போக்குவரத்து வசதி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து தேனிக்கு முதல் சரக்கு ரெயில் நேற்று முன்தினம் இரவு வந்தது. தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து, 1,326 டன் ரேஷன் அரிசிகளை ஏற்றிக் கொண்டு 21 பெட்டிகளுடன் கூடிய அந்த சரக்கு ரெயில் தேனி ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

அந்த ரெயில் பெட்டிகளில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி ஆகிய 5 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஏராளமான லாரிகள் ரெயில் நிலையத்தின் குட்செட் பகுதிக்கு வந்தன.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

குட்செட்டில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை ரெயில் பெட்டிகளில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவை கிடங்குகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முன்னதாக, முதல் சரக்கு ரெயிலில் வாழை மரங்கள் தோரணம் கட்டுப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com