

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026-னை முன்னிட்டு, சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் கணினி குலுக்கல் முறையில் சுழற்சிக்கு முதல் சமவாய்ப்பிற்கு உட்படுத்தப்பட்ட (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அனுப்பப்படும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இன்று (27.03.2026) பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை எந்த சட்டமன்றத் தொகுதிக்கு எந்த இயந்திரங்கள் என்பது கணினி குலுக்கல் சுழற்சி முறையில் முதல் சமவாய்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு, அதன் விவரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, ஆர்.கே.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கூடுதலாக 20% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளும், 30% வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கணினி குலுக்கல் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைபேசி செயலி மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக இன்று மட்டும் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்படும். மேலும், 19,500 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படும்.
கேள்வி: சென்னையில் கூடுதலாக எவ்வளவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் இருக்கிறது? பழுது ஏற்படும் நிலையில் எவ்வளவு இயந்திரம் கையிருப்பில் உள்ளன?
டிசம்பர் மாதம் மூன்று வாரத்திலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை இந்த இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணி பெல்ஸ் பொறியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு, சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 20% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30% வாக்காளர் தங்களது வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதுமான இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.
கேள்வி: சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர தனியார் இடங்களில், நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்ல அரசியல் நிகழ்ச்சி நடத்துறதுக்கு அனுமதி இருக்கா? இல்ல அதுக்கு அனுமதி வாங்குறதுக்கு வழிமுறை இருக்கா?
நட்சத்திர விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடையில்லை. தேர்தல் தொடர்பான கூட்டங்கள் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறையினரால் வரையறுக்கப்பட்டுள்ள பொது இடங்களில் மட்டும் Suvidha செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.
கேள்வி: தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அனுமதி கேட்டுருக்காங்க, அது வழங்கப்பட்டிருக்கா? என்ன பண்ணிருக்காங்க?
தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்த கட்சிகள் மற்றும் தனிநபர்கள் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்திட Suvidha செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தொடர்புடைய கட்சிகள் சார்பாக மேடை அமைத்தல் மற்றும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு பொதுப்பணித்துறையின் அனுமதி மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் காவல்துறையின் தடையின்மைச் சான்றும் பெற வேண்டும்.
நிறைய விண்ணப்பங்கள் அனுமதி கேட்டு வந்துள்ளன. அவற்றிற்கு அனுமதி வழங்கி வருகிறோம். காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் அனுமதி கேட்டால் அவை நிராகரிக்கப்படுகிறது. நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
கேள்வி: அனுமதி வழங்குவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவெடுப்பாரா?
தேர்தல் நடத்தும் அலுவலர் தான் அனுமதி கொடுக்க வேண்டும். தேர்தல் தொடங்கியவுடன் அனுமதி வழங்குவது முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலரைச் சார்ந்தது. தொடர்புடைய துறைகள் தடையின்மைச் சான்று வழங்கிய உடனேயே தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கிடுவார். தடையின்மைச் சான்று வழங்குவதற்கு காலதாமதமானால் மாவட்ட தேர்தல் அலுவலரை சம்பந்தப்பட்ட கட்சியினர் தொடர்பு கொள்ளலாம். அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் கூட அனுமதியளித்துள்ளோம். Suvidha செயலியில் மூலமாகவே அனுமதி பெற வேண்டும்.
கேள்வி: நட்சத்திர வேட்பாளர்கள், விஜய் மாதிரி நடிகர்கள் வேட்பாளர்களா உள்ளவர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடுதல் பாதுகாப்பு இருக்குமா? ஏன்னா ஏற்கனவே பல அசாம்பாவிதங்கள் நடந்திருக்கு...
இதுபோன்ற நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு காவல்துறையினர் போதுமான காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் பாதுகாப்பினை வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல்/இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் விஜய்பாபு, நா. பூஷ்ணாதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.