நெல்லையில் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகம், டோனாவூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையில் நேற்று வகுப்பறையில் ஏற்பட்ட வாய் தகராறின் தொடர்ச்சியாக, இன்று காலை ஒரு மாணவன் அரிவாளால் மற்றொரு மாணவனை முதுகில் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த தாக்குதல் நடத்திய மாணவனின் சமூகத்தைச் சார்ந்த மற்றொரு மாணவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை “பள்ளியில் கொடூர தாக்குதல்”, “இரு சமூகங்களுக்கு இடையேயான பெரிய சம்பவம் அல்லது மோதல்” என்று மிகைப்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி சேனல்களில் வெளியிடப்படுவது முற்றிலும் தவறானது. இப்படியான மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பொது மக்களிடையே தேவையற்ற பீதியினை ஏற்படுத்துகின்றன.
எனவே நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தாமல், சமூகப் பொறுப்புடன் சம்பவம் குறித்த செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






