கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தகராறு; விவசாயி படுகொலை - கொடைக்கானல் அருகே பரபரப்பு

கொலையாளி மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் தகராறு; விவசாயி படுகொலை - கொடைக்கானல் அருகே பரபரப்பு
Published on

திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் என்பவரின் கால்நடைகள், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி ரகுவின் விவசாய நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராமரை ஏற்கனவே ரகு கண்டித்துள்ளார். இருப்பினும் அடுத்தடுத்து பலமுறை கால்நடை மேய்ச்சல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ராமர் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த ஆகியோரை ரகு தனது விவசாய நிலத்திற்கு வரவழைத்து கால்நடை மேய்ச்சல் பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.

அந்த சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகு தன்னிடம் இருந்த அரிவாளால் ராமர் மற்றும் பிரசாந்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாந்த் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே ரகு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், உயிரிழந்த ராமரின் உறவினர்கள் பூம்பாறையில் உள்ள முக்கிய சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் ரகுவோடு சேர்ந்த்து மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் கொலையாளி மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு நடுவே சிலர் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்களை சமரசம் செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், காவல்துறையின் மெத்தனப்போக்கு மற்றும் முறையற்ற விசாரணை ஆகியவற்றைக் சுட்டிக்சாட்டி, உயிரிழந்த ராமரின் குடும்பத்தினரும், போராட்டக்காரர்களும் பின்வாங்க மறுத்துவிட்டனர். நிலைமை மேலும் தீவிரமடைவதை தடுக்க, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com