

திருவண்ணாமலை ,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்க டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அப்போது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வழங்க வேண்டிய நிலையில், ரூ.8 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜ் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், பீர் பாட்டிலால் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் கோவிந்தராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்தக் காயத்துடன் கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.