

சேலம்,
கோவையில் தனியார் ஓட்டல் ஒன்றில் கட்சியினருடன் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் "ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க. என்னன்னு கேட்டீங்கன்னா, பேற இடத்திலேயேயும் இருக்கிற இடத்திலேயேயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இனிமேல் இருக்கக் கூடாது. கரெக்ட்டான ஃப்யூச்சரையும், நமக்கான பெசிஷனையும் சரிபண்ணிட்டுத்தான் நாம பேகணும். அந்த ஐடியாவோடு தான் நான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன். அந்தப் பட்டியலையும் ரெடி பண்ணி வைக்கிறேன். இங்கு யார் கிட்டேயும் பேய் நிற்க எனக்கு இஷ்டமில்லை. எல்லோரையும் திருப்தி பண்ணி, அட்ரஸ் இல்லாமல் 14 வருசம் வெளியில் இருந்த டி.டி.வி.தினகரனை ஊருக்குக் காண்பித்ததே நான்தான். ஜெயலலிதா சாவில் கூட அவர் கிடையாது. யேசனை பண்ணி உங்ககிட்ட பேசுறேன்" என்று முடிகிறது வீடியே.
புகழேந்தியின் பேச்சு, அமமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக பேசிய பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், "தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அவர் பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு செல்வதைப் போல் தெரிகிறது. புகழேந்தி கட்சியை விட்டு சென்றால் வருத்தப்படுவேன்" என கூறினார்.
இதுகுறித்து புகழேந்தி கூறும் போது, "ஊர் ஊராக சென்று தினகரனை நான் தான் அடையாளப்படுத்தினேன். அந்த வீடியோவில் எந்த இடத்திலும் நான் கட்சியில் இருந்து விலகப்போவதாக கூறவே இல்லை. என்னை அசிங்கப்படுத்த அமமுக ஐடி பிரிவு இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. சின்னம்மா என்ன சொல்கிறார்களோ அதற்கு கட்டுப்படுகிறேன்" என கூறி உள்ளார்.
இந்த நிலையில் புகழேந்தி சேலத்தில் வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளார். புகழேந்தி முதல்வரைச் சந்தித்து உள்ளதால் அவர் அதிமுகவில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.