மனைவியை மகன் அடித்ததால் மன உளைச்சல்: டேங்கர் லாரியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

மனைவியை மகன் அடித்ததால் மன உளைச்சல் அடைந்த கேரள டிரைவர் டேங்கர் லாரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா நடுப்புணி டாஸ்மாக் மதுக்கடை அருகே டேங்கர் லாரியின் மேற்பகுதியில் உள்ள கம்பியில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது இடது கையில் அறுத்துக்கொண்ட காயமும் இருந்தது. பின்னர் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர், கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் தலவூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அத்துடன் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராதாகிருஷ்ணனுக்கு சீமா என்ற மனைவி, ஆனந்த் என்ற மகன் மற்றும் அச்சு என்ற மகள் உள்ளனர். இதில் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் மகன் ஆனந்த் குடிபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் குடிபோதையில் தாயார் என்றும் பாராமல் சீமாவை தாக்கியுள்ளார்.

இதை அறிந்த ராதாகிருஷ்ணன் மன உளைச்சல் அடைந்தார். பின்னர் அவர், எர்ணாகுளம் இடுக்கரையில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்சிக்கு சென்று சிமெண்டு ஏற்றுவதற்கு நடுப்புணிக்கு வந்துள்ளார். அங்கு இடது கை மணிக்கட்டிற்கு கீழ் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அந்த வெட்டுக்காயத்தை புகைப்படம் எடுத்து தனது குடும்ப வாட்ஸ்-அப் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் முகநூல் பக்கத்தில் 'நான் இனி வரமாட்டேன்' என்று வீடியோவும் பதிவிட்டு உள்ளார். அதன்பிறகு டேங்கர் லாரியின் மேற்பகுதியில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com