பக்ரைன் நாட்டில் தவித்த தொழிலாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பினார்

பக்ரைன் நாட்டில் தவித்த தொழிலாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பினார். அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பக்ரைன் நாட்டில் தவித்த தொழிலாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பினார்
Published on

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 59). இவரது மனைவி நல்லம்மாள். இவர்களது மகள் சுந்தராம்பாள், மகன் மணிவேல். பச்சமுத்து பக்ரைன் நாட்டிற்கு தோட்ட வேலைக்காக கடந்த 1993-ம் ஆண்டு சென்றார். இதில் 1996-ம்ஆண்டு வரை பச்சமுத்து தனது மனைவி நல்லம்மாளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். மேலும் கடிதம் மூலமும் பேசி வந்துள்ளார். அதன் பிறகு எந்த தகவலும், தொடர்பும் பச்சமுத்துவிடம் இருந்து நல்லம்மாளுக்கு கிடைக்கவில்லை.

இ்ந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு பச்சமுத்து தங்கியிருந்த அறையில் அவரும் தங்கியுள்ளார். அப்போது பச்சமுத்து தனது ஊர் குறித்தும், தனக்கு எஸ்.புதூரில் முத்துசாமி என்கிற உறவினர் இருப்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.

சரியான வேலை இல்லை

மேலும் தனக்கு சரியான வேலையும், பணமும் இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை தங்கதுரை முத்துசாமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர், மணிவேலிடம், பச்சமுத்து பக்ரைன் நாட்டில் இருப்பது குறித்த தகவலை கூறியுள்ளார். இதையடுத்து பக்ரைன் நாட்டில் தவித்து வரும் தனது தந்தை பச்சமுத்துவை மீட்டு தரும்படி கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே பக்ரைன் நாட்டில் உள்ள அன்னை தமிழ்மன்ற நிர்வாகிகளின் உதவி மணிவேலுக்கு கிடைத்தது. இதையடுத்து அன்னை தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பச்சமுத்துவை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

வரவேற்றனர்

அதன்படி பச்சமுத்துவை விமானம் மூலம் சென்னைக்கு அன்னை தமிழ்மன்ற செயலாளர் தாமரைக்கண்ணன் அழைத்து வந்து மணிவேலிடம் ஒப்படைத்தார். தனக்கு 2 வயது இருக்கும் போது பக்ரைன் நாட்டிற்கு சென்ற தனது தந்தையை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மணிவேல் பார்த்ததால், அவரை கண்ணீர் மல்க வரவேற்றார். பின்னர் மணிவேல் தனது தந்தையை சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். அங்கு நல்லம்மாள் மற்றும் உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் பச்சமுத்துவை வரவேற்றனர். வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றவர் 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com