மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்

குமரி மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
Published on

நாகர்கோவில், 

குமரி மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

குடற்புழு நீக்க மாத்திரை

குமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ரத்த சோகையில், உடல் சோர்வு ஏற்பட்டு செயல்திறன் குறைவாகும். மேற்கண்ட குறைபாடுகளை களைவதற்கு வருடத்துக்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.

நடவடிக்கை

இன்று 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை, ஊட்டச்சத்துதுறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை இணைந்து செயல்படுவார்கள்.

இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் பேசினார்.

அதனைத்தொடர்ந்து குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் அவசியம் குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பொது சுகாதாரப்பணி ஆய்வாளர் சூரிய நாராயணன் உள்பட டாக்டர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com