

சென்னை,
கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி நடமாடும் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளும் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை திறந்திருக்கும் என்றும், தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.