

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026 அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 % மேற்பட்ட வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் தகுதியுள்ள வாக்காளர்கள், படிவம் 12D (Form 12D)-ஐ சமர்ப்பித்து வீட்டிலிருந்து வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவிப்பவர்களுக்கு படிவம் 12D வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகுதி பெற்ற 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேற்பட்ட வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாகச் சென்று படிவம் 12D-ஐ வழங்குவார்கள். அதேபோல், நிரப்பப்பட்ட படிவத்தையும் அவர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக பெற்றுக் கொள்வார்கள்.
இந்த 12D படிவம் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடங்கி அந்த தேர்தலுக்கான அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளுக்கு அடுத்த 5 நாட்களுக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதாவது பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12D –ஐ ஏப்ரல் மாதம் 4-ம் தேதிக்குள் திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொள்ள இயலாதவர்கள் 1913 (அ) மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 425 7012 –ஐ தொடர்பு கொள்ளலாம், கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் இந்த தகவலை தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தெரிவித்து 12D படிவம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
எனவே, மேற்கண்ட பிரிவில் தகுதி பெற்றுள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியைப் பயன்படுத்த விரும்பினால் படிவம் 12D மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
மேலும், இந்த வசதி முழுமையாக விருப்பத் தேர்வாகும். வாக்குச்சாவடியில் நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் தகுதி பெற்ற வாக்காளர்கள் படிவம் 12D சமர்ப்பிக்க தேவையில்லை, அவர்கள் வழக்கம்போல் தங்களுக்குரிய வாக்குச்சாவடியில் நேரில் சென்று வாக்களிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.