மாவட்ட தலைநகரங்களில் 25-ந் தேதி நடக்கிறது அ.தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்

அ.தி.மு.க. வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 25-ந் தேதி நடக்கிறது. வடசென்னையில் ஓ.பன்னீர்செல்வமும், தென்சென்னையில் எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார்கள்.
மாவட்ட தலைநகரங்களில் 25-ந் தேதி நடக்கிறது அ.தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், 25-1-2019 வெள்ளிக்கிழமை அன்று கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும்; கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும் தொடர்பு கொண்டு, வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், 25-ந்தேதி வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். இதேபோல், அன்றைய தினம் தென்சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com