எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27, அமமுகவுக்கு 11, பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.

இந்த கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,தமாக,ஐ.ஜே.கே, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக அதிமுக தலைமையும், பாஜக தலைமையும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது.

கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏற்கனவே பேசி முடிவு செய்து விட்டனர்.

இந்தநிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியது. இதற்காக மத்திய மந்திரியும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று இன்று மதியம் பழனிசாமியை சந்தித்து பேசினார். தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார். முடிவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது.

இதன்படி, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள இதர கூட்டணி கட்சிகளுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நாளை(24.03.2026) மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு கிட்டதட்ட முடிவடையும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com