முதல்-அமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

முதல்-அமைச்சர் விஜய், சங்கீதா ஆஜராகாதநிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
Published on

செங்கல்பட்டு,

தமிழக முதல்-அமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து கோரி மனு

த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.

வழக்கு ஒத்திவைப்பு

இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி முதல்-அமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு தேவையான இ-மெயில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று விசாரணைக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகாததால், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com