தீபாவளி பண்டிகை: சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடிக்கவும் அனுமதியில்லை.
தீபாவளி பண்டிகை: சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அலைமோதும் மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

பொதுமக்கள் புத்தாடைகள், நகைகள், பட்டாசு போன்ற பொருட்களை வாங்கு வதற்காக சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலை -ஜி.ஏ. சாலை, கோயம்பேடு, அண்ணாநகர், அடையாறு போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இவ்வாறு கூடும் மக்கள் கூட்டத்துக்கு, உரிய பாதுகாப்பு கொடுக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

18 ஆயிரம் போலீசார்

இதையொட்டி சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் 12 சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், குற்றச்செயல்களை தடுப்பதற்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூடும் இடங்களில் 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 37 தற்காலிக காவல் உதவி மையங்கள், 10 சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆடைகள் அணிந்தும் 100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'டிரோன்கள்' மூலம்

கூட்ட நெரிசலில் காணாமல்போகும் சிறுவர், சிறுமிகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 199 மாறுவேட போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். குற்றவாளிகளின் முக அடையாளத்தை வைத்து கண்டுபிடிக்கும் எப்.ஆர்.எஸ். என்ற செயலியும் செல்போன் வாயிலாக உருவாக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 'டிரோன்கள்' மூலமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2 மணி நேரம் அனுமதி

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பட்டாசு கடைகள் வைக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டும் பொதுமக்கள் பட்டசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் அதை ஏற்று செயல் பட வேண்டும். சிறுவர், சிறுமிகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். குடிசைகள் உள்ள பகுதிகளில் 'ராக்கெட்' போன்ற பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை.

போலீசார் வேண்டுகோள்

ஆஸ்பத்திரிகள் அருகிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளும் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடிக்கவும் அனுமதியில்லை.

மொத்தத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல், பொதுமக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடவேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X