தீபாவளி பண்டிகை; தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிரம்பி வழிந்த கூட்டம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், வண்டலூர் சந்திப்பு, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மொத்தம் 1,500 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை; தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிரம்பி வழிந்த கூட்டம்
Published on: 

சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வதால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பயணிகள் கூட்டம்

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பய ணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தாம்பரம் மாநகர போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், வண்டலூர் சந்திப்பு, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மொத்தம் 1,500 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மாற்றுப்பாதை

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்திலும், கும்பகோணம் மார்க்க பஸ்கள் மறைமலைநகரிலும், திருவண்ணாமலை மார்க்க பஸ்கள் காலநிலை பூங்கா அருகிலும் இருந்து இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் ரெயில் நிலையம்

இதற்கிடையே, தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. கொல்லம், ராமேசுவரம், செங்கோட்டை விரைவு ரெயில்களில் செல்ல ஏராளமானோர் குவிந்தனர். அசாம் மாநில தொழிலாளர்கள் தாம்பரம்-தின்சுகியா ரெயிலில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

இதனால் 7, 8, 9-வது நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவில்லா பெட்டிகளில் ஏறுவதற்கு பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். எனவே, ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X