தீபாவளி பண்டிகை பயணம்; வெறிச்சோடிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

இதனால், மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்தி கொண்டனர்.

தீபாவளி பண்டிகை பயணம்; வெறிச்சோடிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
Published on: 

சென்னை

தீபாவளி பண்டிகைக்காக 3 நாட்களாக மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

3 நாட்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 901 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய 6,573 பஸ்களுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பஸ்கள் (அதில், ஆயிரத்து 659 தனியார் ஒப்பந்த பஸ்கள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வருகிற 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4 ஆயிரத்து 382 பஸ்களுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பஸ்கள் (அதில், ஆயிரத்து 241 தனியார் ஒப்பந்த பஸ்கள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11 ஆயிரத்து 197 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு ரெயில்கள்

இந்த நிலையில், சென்னையில் இருந்து ஏறக்குறைய 3.79 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 2 நாட்களில் 8,296 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம், வண்டலூர் சந்திப்பு, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மொத்தம் 1,500 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதால் கிளம்பாக்கம் பஸ் நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் வரவுக்காக சில பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பெருமளவிலான மக்கள் ஊருக்கு புறப்பட்டு விட்ட நிலையில், போதிய ஆட்கள் வராமல் அவை காத்திருக்கின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம்போல் இயக்கப்படும் ரெயில்களுடன், சிறப்பு ரெயில்களும் அதிக அளவில் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல பொது போக்குவரத்து வசதியை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொண்டனர்.

X